யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு 500 வருடங்களுக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கின்றது. யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்திலிருந்து இப்பிரதேசத்தில் குடியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டிருந்தது வரலாறாகும். மேலும் முஸ்லிம் மக்கள் தமது மார்க்க கலாச்சாரத் தனித்துவங்களைப் பேணிக் கொண்டு இப்பிரதேச மக்களுடன் பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றி வந்துள்ளார்கள்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஆரம்ப முஸ்லிம் குடியிருப்புக்கள் உசன், சாவகச்சேரி, மீசாலை, நயினாதீவு, நல்லூர், ஆனைப்பந்தி போன்ற இடங்களில் வசித்துள்ளனர். பின்னர் பல்வேறு காரணங்களால் இப்பகுதியிலிருந்த முஸ்லிம் குடியிருப்புக்களுக்கு யாழ்ப்பாணம் நகர சோனகத் தெருவே பிரதான முஸ்லிம் குடியிருப்பாக மாறியது.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள்) 1990ல் இருபத்துமூவாயிரத்துக்கும் (23,000) மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்தனர். தற்போது இம்மக்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்திற்கும் அதிகமாகும்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள்) 1990ல் இருபத்துமூவாயிரத்துக்கும் (23,000) மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்தனர். தற்போது இம்மக்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்திற்கும் அதிகமாகும்.
முஸ்லிம் மக்களின் பாரம்பரியம்
யாழ் நகரில் சோனகத்தெருப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் யாழ்ப்பாணப் பாரம்பரியத்தைக் கொண்டவர்களாகவும், பசார் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் கொழும்பு வெளிமாவட்டத் தொடர்பு கொண்டவர்களாகவும், அண்மைக் காலங்களில் குடியேறியவர்களாகவும் காணப்பட்டனர். கோட்டை பிரதான வீதிப்பகுதி, தீவுப்பகுதி, பூநகரிப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் தென்னிந்திய கீழக்கரை முஸ்லிம்களுடன் தொடர்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்தின் ஓர் உபபிரிவைச் சார்ந்த தாவுதி போறாக்கள் இந்தியாவில் குஜராத் நகரத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய ஏறக்குறைய 300 தாவுதி போறாக்கள் இருந்தனர். இவர்களது சமய நடவடிக்கை ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் பகுதியுடன் காணப்பட்டது
யாழ் முஸ்லிம்களின் தொழில் முயற்சிகள்
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் நகரப்பகுதிகளில் வாழ்வதால் இவர்கள் நகரசார்புத் தொழில்களையே செய்து வந்தனர். நாச்சிக்குடா, பள்ளிக்குடா, வெள்ளைக்கடற்கரை, பள்ளிவாசல் குடியிருப்பு ஆகிய இடங்களில் வாழும் முஸ்லிம்களில் ஒரு சிறு பகுதியினர் மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர். யாழ் நகர முஸ்லிம்கள் குறிப்பாக வியாபாரத்திலும் சேவைக் கைத்தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் நடைபாதை வழியோடி வியாபாரிகளாக இருந்தனர். குறித்த சில பொருட்களின் வர்த்தகத்தில் இவர்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். நகை, இரும்பு, கண்ணாடி, மணிப்பொருட்கள், சாய்ப்புச் சாமான்கள், இறைச்சி ஆகிய வர்த்தகத்தில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தனர். நகர நடைபாதையில் புடவை, தைத்த ஆடைகள் விற்பனையிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தனர். வழியோடி வியாபாரத்திலும் பழம் பொருட்கள் சேகரித்தலிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். வியாபாரத்திற்கு அடுத்து சேவைக் கைத்தொழிலிலும் கூடுதலாக ஈடுபட்டுள்ளனர். உடுபுடவை தைத்தல், மெத்தைச்சார் மறுசீரமைப்புத் தொழில், தகர வேலைகள், தோல் வேலைகள், குடை திருத்துதல், திறப்பு வெட்டுதல் போன்ற துறைகளில் முஸ்லிம்கள் கூடுதலாக ஈடுபட்டனர். யாழ்ப்பாண நகர தையல் கடைகள் பல முஸ்லிம்களாலேயே நடத்தப்பட்டன.
அரச தொழில்
யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் அரச தொழில் புரிவோர் மிகக் குறைவாக இருந்தனர். அரச தொழில் புரிவோரில் பெரும்பானமையினர் ஆசிரியர்களாக இருந்தனர். மற்றும் தொழில்களில் சிறிதளவு எண்ணிக்கையினர் காணப்பட்டனர். ஆசிரியத் தொழிலில்தான் சிறிதளவு எண்ணிக்கையான முஸ்லிம் பெண்கள் வேலை செய்வதைக் காணமுடிந்தது. வேறு தொழில்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது எனலாம்.
முஸ்லிம் மக்களின் வெளியேற்றம்
1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகளால் வடமாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்களுடைய பூர்வீக இடத்திலிருந்து ஆயுதமுனையில் பலாத்காரமாக வெறும்கையுடன் வெளியேற்றப்பட்டார்கள். இவ்வாறு வெளியேற்றப்பட்ட யாழ், கிளிநொச்சி மாவட்டத்தின் முஸ்லிம் மக்களுக்கு இரண்டு மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் 20 வருடங்கள் வடமாகாணத்திற்கு வெளியே அனுராதபுரம், புத்தளம், கம்பஹா, கொழும்பு, கழுத்துறை மாவட்டங்களில் அகதி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் இடம்பெயர் அகதி வாழ்வை பல துன்பங்களுக்கு மத்தியில் கழித்த விட்டனர். தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சூழ்நிலையில் தங்களது சொந்த மண்ணிற்கு திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர்.